ஊரடங்கு தளர்வால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊரடங்கு தளர்வால் விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் கடும் மேகமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Update: 2021-07-10 22:45 GMT
ஏற்காடு:
ஊரடங்கு தளர்வால் விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் கடும் மேகமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
ஊரடங்கில் தளர்வு
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், வெளி மாநில சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். அவர்கள் அண்ணா பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு, ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வார்கள். 
இதனிடையே கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இல்லாமல் ஏற்காடு வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து 3 மாதங்களுக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை முதல் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இ-பாஸ் முறையும் ரத்து செய்யப்பட்டது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் சேர்வராயன் கோவில், பக்கோடா பாயின்ட், லேடிஸ் சீட் ஆகிய பகுதிகளுக்கு சென்று மகிழ்ந்தனர். அண்ணா பூங்கா, படகு இல்லம் திறக்கப்படாததால் அவர்கள் சற்றே ஏமாற்றம் அடைந்தனர். 
இதனிடையே நேற்று மாலை ஏற்காட்டில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. மேலும் குளிரும் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் மேக மூட்டத்தின் முன்னிலையில் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், குளிருக்கு இதமாக சாலையோர கடைகளில் பஜ்ஜி உள்ளிட்ட பலகாரங்களை சூடாக சுவைத்தனர். இதனால் கடைகளில் விற்பனை படுஜோராக நடந்தது.
மேக மூட்டம்-கடும் குளிர்
கடும் மேக மூட்டம் காரணமாக ஏற்காட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி ஊர்ந்து சென்றன. சுற்றுலா பயணிகளின் வரத்து மற்றும் மேகமூட்டத்தால் படகு இல்லத்தை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து இரவிலும் கடும் குளிர் நிலவியது.

மேலும் செய்திகள்