சேலத்தில் ‘ரோபோ’ மூலம் சாக்கடை அடைப்புகள் சரிசெய்யும் பணி-மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சேலத்தில் ‘ரோபா’ மூலம் சாக்கடை அடைப்புகள் சரிசெய்யும் பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2021-07-10 22:45 GMT
சேலம்:
சேலத்தில் ‘ரோபா’ மூலம் சாக்கடை அடைப்புகள் சரிசெய்யும் பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
முககவசம்
சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் நேற்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் பணிக்கு சரியாக வந்து உள்ளனரா? என்று வருகை பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
தூய்மை பணியாளர்கள் பணியின் போது கையுறை, முககவசம் அணிந்துள்ளனரா? என்றும் ஆய்வு நடத்தினார்.
அப்போது தூய்மை பணியாளர்கள் தங்கள் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் எந்த இடத்திலும் குப்பைகளே இல்லாத அளவிற்கு பணி மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்கினார்.
உரம் தயாரிக்கும் மையம்
இதைத்தொடர்ந்து அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட காக்கயன் சுடுகாடு பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது ஒரு நாளைக்கு எத்தனை டன் குப்பைகள் நிலையத்திற்கு வருகிறது. எந்தெந்த வார்டுகளில் இருந்து பெறப்படுகிறது. பெறப்படுகின்ற குப்பை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உரம் எத்தனை டன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை மக்கள் பார்வைக்கு எழுதி வைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட 40-வது வார்டு மாணிக்கவாசகம் தெருவில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்டு அறிந்தார். அப்போது அந்த பகுதி மக்கள் தேங்கி உள்ள கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சுகாதார பணியாளர்களை அழைத்து குப்பைகளை அகற்ற அவர் உத்தரவிட்டார்.
‘ரோபோ’ மூலம்...
மேலும் கழிவு நீர் தேங்காமலும், பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் என்றும் பணியாளர்களிடம் ஆணையாளர் அறிவுறுத்தினார். பின்னர் சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்யும் ‘ரோபோ’ எந்திரத்தின் செயல்பாடு மற்றும் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகர என்ஜினீயர் அசோகன், மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் சரவணன், சண்முக வடிவேல், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், புவனேஸ்வரி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்