கோவையை தலைநகரமாக்கி கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்; பெருந்துறை நகர பா.ஜனதா தீர்மானம்

கோவையை தலைநகரமாக்கி கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பெருந்துறை நகர பாரதீய ஜனதா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-07-10 21:36 GMT
பெருந்துறை
கோவையை தலைநகரமாக்கி கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பெருந்துறை நகர பாரதீய ஜனதா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ஜனதா கூட்டம்
பெருந்துறை நகர பாரதீய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பஜனை கோவில் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.   இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க. நகர தலைவர் கருடாவிஜயகுமார் தலைமை தாங்கினார். ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் டி.என்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். 
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கொங்கு நாடு
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய 9 மாவட்டங்களையும் இணைத்து கொங்குநாடு என்கிற புதிய மாநிலத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மேலும் கோவையை தலைநகராக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் நிர்வாக ரீதியாக, கோவையில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரமுள்ள சென்னைக்கு செல்ல வேண்டிய இடர்பாடுகள் குறையும்.
 தனி மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ, கொங்கு மண்டலத்தை அறிவிக்க வேண்டும். இதனால் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கொங்கு மண்டலத்தில் எளிதாக கிடைப்பதால் சென்னையை தேடி மக்கள் அலைய வேண்டிய நிலை வராது.
தனிச்சிறப்பு
 சாலை வசதி, பஸ், ரெயில் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளும் கொங்கு மண்டலமான கோவை, சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் ஆகிய ஊர்களில் சிறப்பான முறையில் இருக்கிறது. இதனால் தலைநகர் டெல்லி மற்றும், மும்பை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பிற மாநில தலைநகரங்களுக்கு, விமானம் மூலம் நேரடியாக சென்று வரும் வாய்ப்பும், கோவையில் இயல்பாகவே அமைந்துள்ளது. 
 இதன் மூலம் கொங்கு மண்டலம், "கொங்குநாடு" என்கிற பெயருடன் தனி மாநில அந்தஸ்துடன் உருவானால், இனி வரும் காலங்களில் இந்த மண்டலத்தின் வளர்ச்சி தனிச்சிறப்பு உடையதாக இருக்கும்.
எனவே, மத்திய அரசு இந்த கோரிக்கையை விரைந்து பரிசீலனை செய்து, கொங்கு மண்டல வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
வழிமொழிந்தனர்
இந்த தீர்மானத்தை  பெருந்துறை தெற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் அம்மன் சண்முகம் தலைமையில் பா.ஜ.க.வினரும், பெருந்துறை வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையில் கட்சியின் நிர்வாகிகளும் தனித்தனியே வழி மொழிந்தனர்.
 கூட்டத்தில், நகர துணைத்தலைவர் சரஸ்வதி, செயலாளர்     விஸ்வநாதன், இளைஞரணி தலைவர் பிரபாகரன், பொருளாளர் யுவராஜ், மகளிர் அணி தலைவி மஞ்சுளா, செயற்குழு உறுப்பினர் கோபக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்