ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; புதிதாக 215 பேருக்கு தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. புதிதாக 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. புதிதாக 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வந்ததால், மாநிலத்திலேயே அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஈரோடும் இடம்பெற்றது. இதன் காரணமாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் கிடைக்காமல் பலரும் சிரமப்பட்டார்கள். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. மாநிலத்திலேயே 2-வது இடத்தில் தொடர்ந்து ஈரோடு காணப்பட்டாலும் பாதிப்பு நிலவரம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 230 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள். 8 ஆயிரத்து 504 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 230 பேருக்கு பாசிட்டிவ் என்று வந்துள்ளது. எனவே பாதிப்பு சதவீதம் 2.7 ஆக உள்ளது.
215 பேர்
நேற்றைய நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 91 ஆயிரத்து 130 ஆக உயர்ந்தது. இதில் 87 ஆயிரத்து 521 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 207 பேர் குணமடைந்தார்கள். தற்போது 2 ஆயிரத்து 997 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 612 பேர் பலியாகி உள்ளார்கள்.