பரப்பன அக்ரஹாரா சிறையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று திடீரென சோதனை நடத்தினர். மோப்ப நாய்கள் உதவியுடன் நடந்த இந்த சோதனையின் போது கைதிகளின் அறையில் இருந்து செல்போன்கள், ஆயுதங்கள் சிக்கின.

Update: 2021-07-10 21:07 GMT
சிறையில் போலீசார் சோதனை நடத்திய காட்சி.
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று திடீரென சோதனை நடத்தினர். மோப்ப நாய்கள் உதவியுடன் நடந்த இந்த சோதனையின் போது கைதிகளின் அறையில் இருந்து செல்போன்கள், ஆயுதங்கள் சிக்கின.

பரப்பன அக்ரஹாரா சிறை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு காட்டன்பேட்டை அருகே பிளவர் கார்டன் பகுதியில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரான ரேகா கதிரேஷ் கொலை செய்யப்பட்டு இருந்தார். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது ரேகா கதிரேசை கொலை செய்த பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைத்தே சதி திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்தது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மேலும் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ.வும், தன்னை பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபடி ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார் என்று கூறி இருந்தார். மேலும் பெங்களூரு நகரில் நடக்கும் ஏராளமான குற்றங்களுக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து திட்டம் தீட்டப்படுவதாகவும், சிறைக்குள் இருந்தபடியே நகருக்குள் ரவுடிகள் குற்றச்சம்பவங்களை அரங்கேற்றி வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் 2 துணை போலீஸ் கமிஷனர்கள், 5 உதவி போலீஸ் கமிஷனர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 120 போலீசார் சென்றனர். பின்னர் தாங்கள் அழைத்து சென்று இருந்த மோப்ப நாய்கள் உதவியுடன் பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள அறையில் போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். காலை 5 மணியில் இருந்து காலை 9 மணி வரை சுமார் 4 மணி நேரம் இந்த சோதனை நடந்து இருந்தது.

செல்போன்கள், கத்திகள் பறிமுதல்

இந்த அதிரடி சோதனையின் போது கைதிகளின் அறையில் இருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள், கஞ்சா, பான் மசாலா, சிகரெட், பீடி பண்டல்கள், பென்டிரைவ், ரூ.7,710 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல்  செய்து, கைதிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த சந்தர்ப்பத்தில் கைதிகள் தாங்கள் சாப்பிட பயன்படுத்தும் தட்டுகளை வளைத்து அதை கத்திகளாக பயன்படுத்தி வந்ததும், சிறையில் நடக்கும் மோதலின் போது அதை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மத்திய குற்றப்பிாிவு போலீசார் எடுத்து சென்றனர்.

இந்த சோதனை குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் நிருபர்களிடம் கூறும்போது, சிறையில் இருந்தபடியே ரவுடிகள் தங்களது கூட்டாளிகள் மூலம் நகரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்பேரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகள் அறையில் சோதனை நடத்தினோம். அப்போது செல்போன்கள், சிம்கார்டுகள், கஞ்சா, பீடி பண்டல்கள், சிகரெட்டுகள் எங்களிடம் சிக்கி உள்ளது. கைதிகளுக்கு செல்போன்கள் கிடைத்தது எப்படி என்று தெரியவில்லை. சிறை வார்டன்கள் உதவியுடன் கைதிகள் செல்போன்கள், கஞ்சாவை பயன்படுத்தி வருகிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தவும் முடிவு செய்து உள்ளோம் என்றார். 

பரபரப்பு

மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய திடீர் சோதனையால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பரபரப்பு உண்டானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதிகளிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அவர்களுக்கு செல்போன்களை சிறை ஊழியர்கள் கொடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்