கோபி அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கோபி அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்துகின்றன. இதனால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-10 21:04 GMT
கடத்தூர்
கோபி அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்துகின்றன. இதனால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளை நிலங்கள்
கொடிவேரி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்கால்கள் மூலம் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. இதனால் இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நெல் மற்றும் வாழைகளை பயிரிட்டு உள்ளனர்.  இந்தநிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் புகுந்து வாழை, நெல் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
விவசாயி 
இதுகுறித்து, கோபி அருகே உள்ள செங்களரை பகுதியை சேர்ந்த விவசாயி கோடீஸ்வரன் என்பவர் கூறுகையில், ‘என்னுடைய விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் புகாமல் இருக்க மின் வேலிகள் எதுவும் அமைக்கவில்லை. ஆனால் அதற்கு பதிலாக விளை நிலங்களில் பல்வேறு இடங்களில் சிறிய குச்சிகளை நட்டு அதில் ஆட்கள் நிற்பது போலவும், துணி மற்றும் பிளாஸ்டிக் பைகளையும் கட்டி உள்ளேன். இதனால் காற்று வீசும் போது அதில் இருந்து வரும் சத்தத்தை கேட்டு இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் வராது’ என்று கூறினார். 
நடவடிக்கை
மேலும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ‘விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகளை ஒரு பக்கமாக விரட்டினால் அவை மற்றொருபக்கம் வழியாக புகுந்து விடுகின்றன. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது’ என்று கூறினர்.
 எனவே வனத்துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்