ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டரை கன்னத்தில் அறைந்த டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமாரிடம் கன்னத்தில் அறை வாங்கியது ஜனதா தளம்(எஸ்) கட்சி பிரமுகர் என்று தெரியவந்துள்ளது.
பெங்களூரு: டி.கே.சிவக்குமார், தன் தோள் மீது கை வைத்து செல்பி எடுக்க முயன்ற ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டரை கன்னத்தில் அறைந்தார்.
ஜனதா தளம்(எஸ்) பிரமுகர்
மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கே.எம்.தொட்டிக்கு நேற்று சென்ற கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் தோளில் கை போட்டு ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கடும் கோபம் அடைந்த டி.கே.சிவக்குமார் அந்த நபரை கன்னத்தில் அறைந்தார். அவர் காங்கிரஸ் தொண்டர் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரிடம் கன்னத்தில் அறை வாங்கியவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியவந்து உள்ளது.
அதாவது கன்னத்தில் அறை வாங்கியவர் பெயர் உமேஷ். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் பிரமுகர் ஆவார். மேலும் மத்தூர் எம்.எல்.ஏ. டி.சி.திம்மண்ணாவின் தீவிர ஆதரவாளரும் ஆவார். டி.கே.சிவக்குமார் தனது கன்னத்தில் அறைந்தது குறித்து உமேஷ் கூறும்போது, ‘‘டி.கே.சிவக்குமார் எனது சாதியை சேர்ந்தவர் என்பதாலும், எனக்கு தூரத்து உறவினர் என்பதாலும் அவருடன் செல்பி எடுக்க முயன்றேன். அப்போது அவரது தோளில் எனது கை பட்டது. இதனால் என்னை டி.கே.சிவக்குமார் அறைந்தார். இது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அவர் தனது நடவடிக்கையை மாற்றி கொள்ள வேண்டும்’’ என்றார்.
தொண்டர் புரிந்து கொள்ள வேண்டும்
இந்த நிலையில், அந்த நபரை அடித்தது எதற்காக? என்பது குறித்து டி.கே.சிவக்குமார் நேற்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், "நான் நடந்து சென்று கொண்டிருந்த போது எனது தோளில் கையை போடுவதற்கு, அந்த நபர் முயன்றார். என் தோளின் மீது கையை போட்டால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதற்கு நானே அனுமதி அளிக்கலாமா?. தோளில் கையை போட்டு புகைப்படம் எடுப்பது, பேசிக் கொள்வது நமது கலாசாரம் இல்லை. இதனை தொண்டர் புரிந்து கொள்ள வேண்டும்," என்றார்.