கணவரை உதறிவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண் தற்கொலை
பாகல்கோட்டை அருகே கணவரை உதறிவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் காதலான வாலிபரின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் நடந்து உள்ளது.
பாகல்கோட்டை: பாகல்கோட்டை அருகே கணவரை உதறிவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் காதலான வாலிபரின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் நடந்து உள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு
பாகல்கோட்டை மாவட்டம் இலகல் தாலுகா கெல்லூரா கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 23). இவரும் அதே கிராமத்தில் வசித்து வந்த பசம்மா (20) என்பவரும் காதலித்து வந்தனர். ஆனால் 2 பேரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பசம்மாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கதக் மாவட்டம் ரோண் தாலுகா சந்தகிரி கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு, பசம்மாவை அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்து மறுவீட்டிற்கு வந்த பசம்மா, தனது கணவர் வீட்டிற்கு செல்லாமல் இருந்து உள்ளதாக தெரிகிறது. மேலும் ரஞ்சித்தும், பசம்மாவும் மீண்டும் தங்களது காதலை தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பசம்மாவிடம், ரஞ்சித் கூறியுள்ளார். அதன்படி வீட்டைவிட்டு வெளியேறிய பசம்மா கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஞ்சித்தை 2-வதாக திருமணம் செய்து இருந்தார். ஆனாலும் ரஞ்சித் வீட்டில் பசம்மாவை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட பசம்மா நேற்று முன்தினம் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் பசம்மாவின் உறவினர்கள் ரஞ்சித்தின் வீட்டிற்கு சென்று அவரது வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி சூறையாடினார்கள். மேலும் ரஞ்சித்தின் வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி பசம்மாவின் உறவினர்கள் தீ வைத்தனர். இந்த தீ, வீடு முழுவதும் பரவி எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர்.
விசாரணை
மேலும் சம்பவம் குறித்து அறிந்த இலகல் போலீசார் கொல்லூரா கிராமத்திற்கு சென்று பசம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் காதலன் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாதால் பசம்மா தற்கொலை செய்ததும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரஞ்சித் வீட்டிற்கு பசம்மா உறவினர்கள் தீ வைத்ததும் தெரிந்தது. தற்கொலை, வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து இலகல் போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.