கரூர் மார்க்கெட்டில் நேற்று விறுவிறுப்பாக பூக்கள் ஏலம்
கரூர் மார்க்கெட்டில் நேற்று விறுவிறுப்பாக பூக்கள் ஏலம் நடந்தது. இதில் 1 கிலோ மல்லிகை ரூ.400-க்கு விற்பனையானது.
கரூர்
பூ மார்க்கெட்
கரூர் ரெயில்வே ஜங்சன் ரோடு பகுதியில் கரூர் மாரியம்மன் பூ மார்க்கெட் வளாகம் உள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர், எழுதியாம்பட்டி, தளவாபாளையம், செட்டிபாளையம், செக்கணம், காட்டூர், பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் நேரடியாக இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்று செல்கின்றனர்.
மேலும் திண்டுக்கல் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்தும் கூட ஏலத்திற்காக பூக்கள் கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும் மல்லிகை, முல்லை, அரளி, ஜாதிப்பூ உள்ளிட்ட பூக்களை இங்கிருந்து வியாபாரிகள், பூக்கட்டும் பெண்கள் உள்ளிட்டோர் வாங்கி செல்கின்றனர்.
மல்லிகை பூ ரூ.400
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவில் 2-ம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் பாதிப்பு குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கரூர் மாரியம்மன் பூ மார்க்கெட் செயல்பட தொடங்கியது. இதனால் நேற்று பூ மார்க்கெட்டில் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பஸ் போக்குவரத்து மற்றும் கோவில்கள் திறக்கப்பட்டதால் கடந்த வாரத்தை விட பூக்களின் விற்பனையும், விலையும் அதிகரித்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு, ஒரு கிலோ எடை கொண்ட மல்லிகை பூ ரூ.350 முதல் ரூ.400-க்கும், முல்லை பூ ரூ.200-க்கும், ஜாதிப்பூ ரூ.500-க்கும், அரளிப்பூ ரூ.80-க்கும், மருவு 4 கட்டு ரூ.60-க்கும், ரோஜாப்பூ ரூ.150-க்கும், சம்மங்கி பூ ரூ.80-க்கும், துளசி 4 கட்டு ரூ.40-க்கும் ஏலத்தில் விலை போனது.