மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
குஜிலியம்பாறை அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே உள்ள கருங்கல் ஊராட்சி ஜக்கம்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மகன் பிரவீன்குமார் (வயது 20) குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குஜிலியம்பாறை அருகே உள்ள சின்னத்தம்பிபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் தங்கதுரை (21). இவர் அரவக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பிரவீன்குமார் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து இருந்தார். இதையடுத்து அவர் தனது நண்பரான தங்கதுரையுடன் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பாளையத்திற்கு சென்று இருந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். இந்நிலையில் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக பிரவீன்குமார் மோட்டார்சைக்கிளை திருப்பினார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
சாவு
இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரவீன்குமார், தங்கதுரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குஜிலியம்பாறை போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.