மாவட்ட சுகாதார அலுவலகத்தை தற்காலிக பணியாளர்கள் முற்றுகை
கள்ளக்குறிச்சியில் மாவட்ட சுகாதார அலுவலகத்தை தற்காலிக பணியாளர்கள் முற்றுகை பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக 143 செவிலியர்கள், 20 சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கடந்த 2 மாதங்களாக பணிபுரிந்து வந்த இவர்களை பணிக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தற்காலிக செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பணி நீட்டிப்பு கோரி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சதீஷ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாக்கி சம்பளத்தை வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும், பணியை நீட்டிக்க எனக்கு அதிகாரம் இல்லை, அரசு தான் முடிவு செய்யும் என்றார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதை பெற்றுக்கொண்ட அவர் உங்களுக்கு சம்பளம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், பணி நீட்டிப்பு சம்பந்தமாக மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிப்பதாகவும் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட தற்காலிக செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வார்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.