திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்க சீசன் டிக்கெட் வழங்கப்படுமா?

திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்க சீசன் டிக்கெட் வழங்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்

Update: 2021-07-10 17:35 GMT
புதுக்கோட்டை, ஜூலை.11-
திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்க சீசன் டிக்கெட் வழங்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சீசன் டிக்கெட்
கொரோனா பரவல் காரணமாக ரெயில் போக்குவரத்து முழுமையாக இயக்கப்படவில்லை. ரெயில்கள் அனைத்தும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பயணிகள் முன்பதிவு டிக்கெட் எடுத்தால் மட்டுமே பயணிக்க கூடிய வகையில் தற்போது நடைமுறையில் உள்ளது. தெற்கு ரெயில்வேயில் ஒரு சில பாசஞ்சர் ரெயில்களில் மட்டும் வழக்கமான முன்பதிவில்லா டிக்கெட் நடைமுறை உள்ளது.
ரெயில்களில் அன்றாடம் பயணிக்க கூடிய பயணிகளுக்கு வசதியாக சீசன் டிக்கெட் வழங்கும் முறை உள்ளது. இதில் குறிப்பிட்ட தூரங்களுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்களில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா டிக்கெட் பெட்டியிலும் பயணிக்கலாம். சீசன் டிக்கெட்டுகளுக்கு தனி கட்டணமாகும்.
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ்
இந்த நிலையில் புதுக்கோட்டை வழியாக திருச்சி-ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டன. தற்போது இந்த ரெயில் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்ய பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து தினமும் பணியின் காரணமாக காரைக்குடி, சிவகங்கை, மானாமாதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருபவர்கள் இந்த ரெயிலை அதிகம் பயன்படுத்துவது உண்டு.
இதற்கு முன்பு சீசன் டிக்கெட் எடுத்து வைத்து பயணம் செய்து வந்தனர். ஆனால் தற்போது சிறப்பு ரெயிலாக முன்பதிவு டிக்கெட் மட்டுமே இருப்பதால் பயணிகள் தினமும் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் பலர் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை
திருச்சி-ராமேசுவரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறிப்பிட்ட பெட்டிகளை முன்பதிவில்லா டிக்கெட் கட்டணத்திற்கு ஒதுக்க வேண்டும். மேலும் இந்த ரெயிலில் பயணம் செய்ய சீசன் டிக்கெட் வழங்க வேண்டும் என புதுக்கோட்டை பயணிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர். இது தொடர்பாக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்பி உள்ளனர். இதனால் ரெயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்