பேரறிவாளனுக்கு விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கு விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பேரறிவாளனுக்கு தமிழக அரசு, கடந்த 2017-ம் ஆண்டு 60 நாட்கள் பரோலும், 2019-ம் ஆண்டு பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நிலை மற்றும் அவரது தங்கையின் மகள் திருமணத்திற்காக 30 நாட்கள் பரோலும் வழங்கியது.
அதன் பிறகு சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்ட பேரறிவாளன், அதற்காக சிகிச்சை பெற கடந்த ஆண்டு 30 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் வீட்டில் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற அவரது தாயார் அற்புதம்மாள், தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். அதன்பேரில் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டது.
விழுப்புரத்தில் சிகிச்சை
இந்நிலையில் கடந்த வாரம் சென்னை புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் 4-வது முறையாக பரோலில் வெளியே வந்தார். அவர் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் தொடர் மருத்துவ பரிசோதனைகளுக்கு தன்னை உட்படுத்தி வருகிறார். இதற்காக பேரறிவாளன் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். பேரறிவாளனுடன் அவரது தாயார் அற்புதம்மாளும் உடன் வந்தார்.
அங்கு பேரறிவாளனுக்கு டாக்டர் குழுவினர் உரிய மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்ததும் நேற்று மாலை விழுப்புரம் மருத்துவமனையில் இருந்து ஜோலார்பேட்டைக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் புறப்பட்டுச்சென்றார். பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக வந்ததையொட்டி அந்த மருத்துவமனை முன்பு விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.