177 வழக்குகளுக்கு சமரச தீர்வு

சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 177 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.;

Update: 2021-07-10 17:15 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 177 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 11 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் நீதிபதி கருணாநிதி, கூடுதல் மாவட்ட நீதிபதி சு.சத்தியதாரா, அமர்வு நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், சார்பு நீதிபதி சுந்தரராஜ், சிறப்பு நீதிபதி உதயவேலவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி பாரத தேவி மற்றும் வக்கீல்கள் செங்கோல், சித்திரைச்சாமி,சவுந்திரபாண்டியன், முருகன், பாலச்சந்திரன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

177 வழக்குகள் தீர்வு

இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 109 குற்றவியல் வழக்குகளும், 56 காசோலை மோசடி வழக்குகளும், 109 வங்கிக்கடன் வழக்குகளும், 82 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 21 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், மற்றும் 145 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும் என மொத்தம் 522 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதில் 176 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு இதன்மூலம் 1 கோடியே 92 லட்சத்து 72 ரூபாய் 948 வழக்காடிகளுக்கு கிடைத்தது.
அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 2 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் வங்கிக்கு வரவானது. இதன்மூலம் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 177 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

மேலும் செய்திகள்