9 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 84 வழக்குகளுக்கு தீர்வு

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 84 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2021-07-10 17:10 GMT
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் நேற்று, தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி ஜமுனா தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். இதையடுத்து வழக்குகளில் தொடர்புடைய இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
இதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாரதிராஜா, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா, சிறப்பு நீதிபதி சாமுண்டீஸ்வரிபிரபா, கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி லலிதாராணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
84 வழக்குகள் தீர்வு 
இதேபோல் பழனி, நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதற்காக மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு கோரும் வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்பட மொத்தம் 250 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
மேலும் அந்த வழக்குகளில் தொடர்புடைய இருதரப்பினரும் நேரில் வரவழைக்கப்பட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 84 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன்மூலம் மொத்தம் ரூ.3 கோடியே 68 லட்சத்து 20 ஆயிரம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்