திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பின்னலாடைகள் அனுப்பும் பணி தீவிரம்

திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பின்னலாடைகள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2021-07-10 17:03 GMT
திருப்பூர்
திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பின்னலாடைகள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
லாரிகள் மூலம்...
திருப்பூரில் பனியன் தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் திருப்பூரில் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுபோல் உள்நாட்டு வர்த்தகமும் நடந்து வருகிறது. வெளி மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பின்னலாடை சரக்குகள் திருப்பூரில் இருந்து லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக திருப்பூரில் ஏராளமான லாரி புக்கிங் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து சரக்குகளும் ஏற்றி, அனுப்பப்படுகின்றன.
பின்னலாடைகள் அனுப்பும் பணி தீவிரம்
இந்த நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக பின்னலாடை தொழில் கடும் பாதிப்பை சந்தித்தது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு நிறுவனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவித்தனர். இதன் பின்னர் கொரோனா தொற்று குறைய, குறைய ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
இதனால் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களும் திருப்பூரில் கடந்த வாரத்தில் இருந்து இயங்க தொடங்கியுள்ளன. இதன் எதிரொலியாக திருப்பூர் ஆடை தயாரிப்பாளர்களுக்கு ஆர்டர்களும் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் திருப்பூரில் பல இடங்களில் இருந்து லாரிகள் மூலம் பின்னலாடை சரக்குகள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்