பழனி, கொடைக்கானல் உள்பட சுற்றுலா தலங்களில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பழனி, கொடைக்கானல் உள்பட சுற்றுலா தலங்களில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.;

Update: 2021-07-10 17:00 GMT

திண்டுக்கல்:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் நேற்று திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் குழந்தைகளுக்கான 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டை திறந்து வைத்தனர். அதேபோல் திண்டுக்கல், பெரும்பாறையில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
சுற்றுலா தலங்களில் தடுப்பூசி 
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தை நோக்கி சரியும் மாவட்டங்களாக திண்டுக்கல்லும், ராமநாதபுரமும் உள்ளன. எனினும் தினமும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் இருப்பு, தடுப்பூசி போடுவதில் தமிழகம் சிறப்பாக உள்ளது.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு வருபவர்கள் எந்தவித அச்சமுமின்றி வரவேண்டும். 100 சதவீதம் பாதுகாப்பான இடத்துக்கு செல்கிறோம் என்று அவர்கள் நினைக்க வேண்டும். இதற்காக திருவண்ணாமலை, ராமேசுவரம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், ஊட்டி உள்பட சுற்றுலா தலங்களில் வசிப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கொடைக்கானல், பழனியில் வாழும் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்படும். இதில் கொடைக்கானலில் தற்போது 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் தடுப்பூசி போடப்படும். அதேபோல் ஆன்மிக சுற்றுலா தலமான பழனியிலும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். இதற்காக கொடைக்கானல், பழனிக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கப்படும்.
குழந்தைகளுக்கு சிறப்பு வார்டு 
கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு சிறப்பு வார்டு தொடங்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல்லில் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் 272 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் தனியார் மையங்களே அதிகம்.
ஆனால் திண்டுக்கல்லில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படும் மையத்தில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக ரூ.52 லட்சம் செலவில் பரிசோதனை கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக தினமும் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யலாம். மேலும் திண்டுக்கல்லில் 2 நடமாடும் தடுப்பூசி வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார நிலையங்கள் மேம்பாடு 
திண்டுக்கல் அரசு மருத்துவகல்லூரி முழுமையாக பயன்பாட்டுக்கு வருவதற்கு ஓராண்டு ஆகிவிடும். அதன்பின்னரே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை பழனிக்கு மாற்ற முடியும். அதற்கு முன்பு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பழனி, கொடைக்கானல் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். தமிழகத்தில் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மொத்தம் 10 ஆயிரத்து 839 உள்ளன. இவை அனைத்தும் 15-வது நிதிக்குழுவில் ரூ.4 ஆயிரத்து 279 கோடி நிதி பெற்று மேம்படுத்தப்படும். அதேபோல் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை சரிசெய்யப்படும். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 100 சதவீதம் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
கருப்பு பூஞ்சை-ஜிகா 
திண்டுக்கல் மாவட்டத்தில் 32 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டனர். அதில் 17 பேர் குணமடைந்து விட்டனர். ஆனால் 3 பேர் இறந்து உள்ளனர். இந்த கருப்பு பூஞ்சைக்கு இறப்பே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். மேலும் ஜிகா வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. ஜிகா வைரஸ் தாக்கினால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். நன்னீரில் வளரும் கொசுக்களால் ஜிகா வைரஸ் பரவுகிறது. அதை தடுக்க கொசு ஒழிப்பை தீவிரப்படுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை முதல்-அமைச்சர் இன்னும் 10 நாட்களில் தொடங்கி வைப்பார். தமிழகத்தில் 20 லட்சம் பேர் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து வாங்குகின்றனர். ஆனால் 1 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டு இருக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் கொரோனா காலத்தில் மருந்துகள் வாங்கி சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கொரோனா தொற்றால் பலர் இறந்தனர். இதை தவிர்க்க வீட்டுக்கே சென்று பரிசோதித்து மருந்து வழங்கப்படும். மேலும் வீட்டுக்கு சென்று டயாலிசிஸ், முடக்குவாதத்துக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் விசாகன், தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தரேஸ்அகமது, மருத்துவ பணிகள் இயக்குனர் குருநாதன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், வேலுச்சாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன், இ.பெ.செந்தில்குமார், நலப்பணிகள் இணை இயக்குனர் சிவக்குமார், அரசு மருத்துவக்கல்லூரி டீன் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்