பனப்பாக்கம் அருகே தன்னைத் தானே கல்லால் தாக்கிக்கொண்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி

தன்னைத் தானே கல்லால் தாக்கிக்கொண்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி

Update: 2021-07-10 16:52 GMT
நெமிலி

பனப்பாக்கத்தை அடுத்த நெடும்புலி பெரிய தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 44). இவருக்கும் மல்லிகா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் மன வேதனைக்கு உள்ளான வெங்கடேசன் குடி பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். மேலும் குடிபோதையில் இருக்கும் போது தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் கையில் கிடைத்ததை கொண்டு தன்னை தானே அடித்துக்கொள்வதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வெங்கடேசன், மாரியம்மன் கோவில் அருகே குடித்துவிட்டு இரத்தக் காயத்துடன் இருப்பதாக அவருடைய மனைவி மல்லிகாவிற்கு தகவல் கிடைத்தது. 

உடனே மல்லிகா உறவினர்களை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது குடிபோதையில் இருந்த வெங்கடேசன் தன்னைத் தானே கல்லால் தாக்கிக்கொண்டதில் தலையில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கடேசனின் மனைவி மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்