முல்லைப்பெரியாறு, வைகை அணைகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு

முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-10 16:50 GMT
கூடலூர்:
முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 
முல்லைப்பெரியாறு அணை
கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தேனி மாவட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணை, மஞ்சளாறு உள்ளிட்ட அணைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக வினாடிக்கு 1,711 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதேபோல் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 492 கன அடியாக இருந்தது. 
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,623 கன அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 126.15 அடியாக இருந்தது. 
இதற்கிடையே நேற்று காலை முதல் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,711 கன அடியில் இருந்து 1,200 கன அடியாக குறைக்கப்பட்டது. 
தண்ணீர் திறப்பு
இதேபோல் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 66.62 அடியாக காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,302 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 769 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கிடையே நேற்று முதல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 769 கன அடியில் இருந்து 469 கன அடியாக குறைக்கப்பட்டது. 
அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அணைகளின் பாசன பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துள்ளது. இதன்காரணமாக பாசன நிலங்களில் ஈரப்பதம் அதிகரித்தது. இதையொட்டி அணைகளில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. ைவகை அணையை பொறுத்தமட்டில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு 40 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அடுத்த வாரம் முதல் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்