அரசு பணத்தை சொந்த கணக்கில் செலுத்திய தேனி முத்திரைத்தாள் தனி தாசில்தார் பணியிடை நீக்கம்
அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை சொந்த கணக்கில் செலுத்திய தேனி முத்திரைத்தாள் தனி தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
தேனி:
அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை சொந்த கணக்கில் செலுத்திய தேனி முத்திரைத்தாள் தனி தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
முத்திரைத்தாள் தாசில்தார்
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முத்திரைத்தாள் தீர்வை தனித்துணை கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான முத்திரைத்தாள் தனி தாசில்தார்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், தேனி மாவட்டத்துக்கான தனி தாசில்தாராக பணியாற்றுபவர் செந்தில்குமார். இவர் தேனி மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறார்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் முத்திரைத்தாள் விற்பனை மூலம் அரசுக்கு வரும் வருவாயை அரசு கணக்கில் முறையாக செலுத்த வேண்டும். அவை முறையாக செலுத்தப்படுகிறதா? என அவ்வப்போது தணிக்கை செய்யப்படும். சொத்துகள் பரிமாற்றங்கள் நடக்கும் போது அரசுக்கு செலுத்த வேண்டிய வரி முத்திரைத்தாள்கள் மூலம் செலுத்தப்படுகிறது. சொத்தின் மதிப்புக்கு ஏற்ப அரசுக்கு செலுத்த வேண்டிய வரிக்கு இணையான மதிப்பில் முத்திரைத்தாள்களை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.
பணியிடை நீக்கம்
இந்தநிலையில் தேனி மாவட்டத்துக்கான முத்திரைத்தாள் தனி தாசில்தார் செந்தில்குமார், அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை அரசின் கணக்கில் செலுத்தாமல், தனக்கு சொந்தமான வங்கிக்கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதிகாரிகள் நடத்திய தணிக்கையில் செந்தில்குமார் செய்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி பல லட்சம் ரூபாய் அவருடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த விசாரணை அறிக்கை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு அனுப்பப்பட்டது. அதன்பேரில், தனி தாசில்தார் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.