சூளகிரி அருகே சிக்னல் கிடைக்காததால் குடிநீர் தொட்டி மீது அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன் கோபுரம் அமைக்க கோரிக்கை

சூளகிரி அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால் குடிநீர் தொட்டி மீது அமர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-10 16:41 GMT
சூளகிரி:
சூளகிரி அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால் குடிநீர் தொட்டி மீது அமர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காளிங்காவரம் ஊராட்சியில், மட்டம்பள்ளி, அக்ரஹாரம், காளிங்காவரம், கொடிதிம்மனப்பள்ளி ஜவுக்குபள்ளம், தின்னூர், குருமூர்த்தி கொட்டாய் என 7 கிராமங்கள் உள்ளன.  இந்த ஊராட்சியில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்புகளின்றி, மாணவர்கள் வீடுகளிலேயே இருப்பதால் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். காளிங்காவரம் ஊராட்சியில் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட எந்த தொலை தொடர்பு நிறுவனங்களின் கோபுரங்களும் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர்.
குடிநீர் தொட்டி மீது அமர்ந்து...
இதனால் அவர்கள் கைகளில் செல்போன், புத்தகங்களுடன் உயர்ந்த மலைப்பகுதிக்கும், அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் மீதும் ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். மாணவிகள் அந்த பகுதிகளில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-
இந்த கிராமத்தில் சரியான முறையில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. மேலும் ஆன்லைன் தேர்வுகளில் அவர்களால் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு படிப்பில் கவனம் குறைந்துவிட்டது. 
காளிங்காவரம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளி, துணை சுகாதார நிலையம், வங்கி, தபால்நிலையம், மக்கள் சேவை மையம் என அனைத்தும் இருந்தபோதிலும், தொலைதொடர்பு நெட்வொர்க் மற்றும் இணைய வசதி இல்லாதது பெரிய குறையாக உள்ளது.
உயிரிழப்புகள்
இந்த பகுதியில், செல்போன் கோபுரம் அமைக்க நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கர்ப்பிணிகள், விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்களை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. அவசர தேவைக்காக செல்போன் சிக்னல் கிடைக்கும் பகுதியை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதற்குள் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தி கொண்டு இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
---

மேலும் செய்திகள்