செவ்வாய், வெள்ளி கோள்கள் இணையும் அரிய வானியல் நிகழ்வு

செவ்வாய், வெள்ளி கோள்கள் இணைவது போன்ற அரிய வானியல் நிகழ்வை நாளையும், நாளை மறுநாளும் பார்க்கலாம்.

Update: 2021-07-10 16:32 GMT
உடுமலை
செவ்வாய், வெள்ளி கோள்கள் இணைவது போன்ற அரிய வானியல் நிகழ்வை நாளையும், நாளை மறுநாளும் பார்க்கலாம்.
 இது குறித்து உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கு.கண்ணபிரான் கூறியதாவது:-
2 கோள்கள் இணையும்
செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்கள் ஒன்றையொன்று நெருங்கி இணைவது போன்ற அரிய வானியல் நிகழ்வு நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் தென்பட உள்ளது. நாளை மாலை சூரியன் மறைந்த பிறகு மேற்கு வானில் இந்த அற்புத காட்சி தெரியும். 
செவ்வாய், வெள்ளி ஆகிய 2 கோள்களுக்கும் சுமார் 4 டிகிரி தொலைவில் பிறைசந்திரன் தென்படும். அன்று மாலை மேற்கு வானில் தென்படும். நாளை மறுநாள் இந்த 2 கோள்களுக்கும் இடையே வானில் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும்.
வெறும் கண்களால் பார்க்கலாம்
கோள்கள் ஒன்றையொன்று நெருங்கும் காட்சியை வெறும் கண்களால் பார்க்க முடியும். இதில் எந்தவித ஆபத்தும் இல்லை. 
உண்மையில் 2 கோள்களும் விண்வெளியில் ஒன்றை ஒன்று நெருங்காது. பூமியிலிருந்து பார்க்கும்போது அவை ஒன்றையொன்று நெருங்குவது போன்று தெரியும். எனினும் இது காண்பதற்கு அற்புத காட்சி ஆகும். இந்த கோள்கள் 13-ந்தேதி வரை ஒன்றையொன்று நெருங்கி வருவதையும், அதன் பிறகு அவை ஒன்றைவிட்டு ஒன்று விலகிச்செல்வதையும் கண்டு ரசிக்கலாம். இப்படிப்பட்ட வான் நிகழ்வுகள் மனிதர்களுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. இந்த அரிய வானியல் நிகழ்வை பொதுமக்கள் தங்கள் பகுதியில் நேரடியாகவோ அல்லது தொலைநோக்கி மூலமாகவோ கண்டு ரசிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்