மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மண்டல வழக்கறிஞர் அணி செயலாளர் ரமேஷ், இளைஞரணி செயலாளர் பிரகாஷ், ஆதிதிராவிட நல அணி செயலாளர் பாரத் ஆகியோர் தலைமை தாங்கினர். மத்திய மாவட்ட செயலாளர் ரங்கநாதன், துணை செயலாளர் ஜவகர், தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், துணைச்செயலாளர் அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், விலை உயர்வை உடனே வாபஸ் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.