எட்டயபுரத்தில் ஆட்டுச்சந்தை திறப்பு

எட்டயபுரத்தில் ஆட்டுச்சந்தை திறக்கப்பட்டது.

Update: 2021-07-10 16:17 GMT
எட்டயபுரம்:
2 மாதங்களுக்கு பிறகு எட்டயபுரம் ஆட்டுச்சந்தை நேற்று திறக்கப்பட்டது. ஆடுகளின் விலை உயர்வால் விற்பனை மந்தமானது.

ஆட்டுச்சந்தை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறுவது வழக்கம். தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் முதன்மையான ஆட்டுச்சந்தை எட்டயபுரம் சந்தை. இந்த சந்தைக்கு சென்னை, மதுரை, கோவை, விருதுநகர், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க வருவது வழக்கம். நல்ல தரமான ஆடுகள், குறைவான விலை என்பதால் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையை நோக்கி அதிகளவில் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள். அதிலும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் போன்ற திருவிழா காலங்களையொட்டி ஆட்டுச்சந்தை களைகட்டும்.

திறப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக ஆட்டுச்சந்தை செயல்படவில்லை. இதனால் ஆடுகளை வளர்ப்பவர்கள் அவற்றை விற்பனை செய்ய முடியமாலும், வியாபாரிகள் ஆடுகளை வாங்க முடியமாலும் தவித்து வந்தனர். 
இந்த நிலையில் தமிழக அரசு தற்போது ஊரடங்கில் தளர்வு கொடுத்து சந்தைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து 2 மாத கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நேற்று எட்டயபுரம் ஆட்டுச்சந்தை நடைபெற்றது.

விலை உயர்வு

வழக்கமாக சந்தை தொடங்கியது முதல் கூட்டம் அதிகமாக காணப்படுவது மட்டுமின்றி விற்பனையும் மும்முரமாக நடைபெறும். ஆனால் நேற்று சந்தை திறப்பது பற்றி எவ்வித முன் அறிவிப்பு இல்லை என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வியாபாரிகள் வரத்து குறைவாக இருந்தது. மேலும் ஆடுகள் வரத்தும் மிக குறைவாக இருந்தது. தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் மட்டுமே வருகை தந்து இருந்தனர். அது மட்டுமின்றி ஆடுகளின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.
ஒவ்வொரு ஆட்டிற்கும் ரூ.3000 முதல் 4000 ஆயிரம் வரை விலை உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக 6 ஆயிரத்திற்கு விற்பனையாகும் ஆடுகள் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டுச்சந்தை செயல்படாத காரணத்தினாலும், ஆடுகள் வரத்தும் குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விற்பனை மந்தம்

ஆடுகள் விலை உயர்வு காரணமாகவும், வியாபாரிகள் வரத்து குறைவாக வந்த காரணத்தினாலும் ஆடுகள் விற்பனை வழக்கத்தை காட்டிலும் மந்தமாகவே காணப்பட்டது. ஆட்டுச்சந்தைக்கு வந்தவர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. மேலும் காவல்துறை சார்பில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது. ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், அதனை பேரூராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்