வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2021-07-10 15:50 GMT
கொடைக்கானல்:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கொடைக்கானலுக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து கடந்த 5-ந் தேதி முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தர அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் நகரில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை அடுத்துள்ள மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரி உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு தற்போது படையெடுக்க தொடங்கியுள்ளனர். 
அதன்படி வார விடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளும் கிராம பகுதிகளுக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக பூம்பாறை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். இதற்கிடையே நேற்று அதிகாலை முதலே வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. பின்னர் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். கடந்த சில வாரங்களாக கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


மேலும் செய்திகள்