ராஜக்கல் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு. போக்குவரத்துக்கு தடை

பேரணாம்பட்டு அருகே ராஜக்கல் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

Update: 2021-07-10 13:54 GMT
பேரணாம்பட்டு

குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம்

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேற்று முன்தினம் இரவும் மாநகர பகுதியில் மழை கொட்டித்தீர்த்தது. 

வேலூர் கோட்டை பின்புறம் உள்ள சம்பத்நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதியில் நேற்று காலை மாநகராட்சியை 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் தெருவில் தேங்கிய மழை தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல வேலூர் மாங்காய் மண்டி, கிரீன் சர்க்கிள் பகுதிகளில் சாலையோரம் குளம்போல் தேங்கி இருந்த மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். 

பலத்த மழை பெய்ததால் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர பள்ளங்களில் மழை வெள்ளம் தேங்கியது. பாதாளச் சாக்கடை மற்றும் கால்வாய் பணிகள் நடந்து வருவதால் தெருக்களில் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் பொது மக்கள் தெருக்களில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ராஜக்கல் பாலாறு

பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மழை பெய்தது. பத்தலப்பல்லி மலட்டாற்றிலுள்ள தமிழக வனப்பகுதியான ராயலுகுண்டிற்கு ஆந்திரா, கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தினால் ஓரளவிற்கு தான் தண்ணீர் வந்தது.

ஆனால் வேலூர் மாவட்ட எல்லையான பேரணாம்பட்டு அருகே அழிஞ்சிக்குப்பம் - ராஜக்கல் பாலாற்றில் தரைப்பாலத்தில் இருபுற கரைகளை தொட்டவாறு வெள்ளம் கரை புரண்டோடியது. 

போக்குவரத்துக்கு தடை

ராஜக்கல் பாலாற்று தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தரைப்பாலம் வழியாக ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டிற்கு நேற்று முன்தினம்  நள்ளிரவு முதல் நேற்று பகல் 2 மணி வரையில் பொதுமக்கள் யாரும் பாலாற்றை கடந்து செல்லாதவாறு மேல்பட்டி போலீசார் இரும்பு தடுப்பு வேலிகளை எச்சரிக்கையாக வைத்து போக்குவரத்தை தடை செய்தனர். 
மாற்றுப்பாதையான நரியம்பட்டு வழியாக பஸ்கள் மற்றும் வாகன போக்குவரத்துகள் திருப்பி விடப்பட்டன.

மேலும் செய்திகள்