ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

8 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்;

Update: 2021-07-10 13:54 GMT
குடியாத்தம்

குடியாத்தம் அருகே அகரம்சேரி பகுதியில் லாரிகள் மூலம் ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக  கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வருவாய் ஆய்வாளர் ஜோதிராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று அகரம்சேரியில் உள்ள ஒரு நிலத்தில் கோழிப்பண்ணை அருகே சென்ற போது அங்கே லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

அந்த லாரியினை சோதனை செய்தபோது அதில் 183 மூட்டைகளில் சுமார் 8 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை ரேஷன் அரிசி மூட்டைகளுடன் பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
மேலும் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள்  நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்ட ரேஷன் அரிசி கடத்திய லாரி குறித்து ஆய்வு செய்தனர். 

தொடர்ந்து மேல் நடவடிக்கைக்காக வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்