காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விடப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விடப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2021-07-10 12:55 GMT
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் நடப்பு பருவத்தில் குறுவை சாகுபடி 7,500 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு குறுவை தொகுப்புத் திட்டம் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி வருகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி மற்றும் 25 கிலோ பொட்டாஷ் உரங்களை முழு மானியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை நெல் சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

குறுவை சாகுபடி பணிகளை சிறப்பு திட்ட உதவிகள் மூலம் தொடங்கினாலும் விவசாயம் தொய்வின்றி தொடர காவிரி நீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. அணையில் தண்ணீர் இருப்பு 72 அடியாக உள்ளது. அணையில் இருந்து 12ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில் அணைக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது.

இந்த நிலை நீடித்தால் விரைவில் அணையில் உள்ள தண்ணீர் வெகுவாக குறைந்துவிடும். அணையில் தண்ணீர் குறைந்து வருவது டெல்டா விவசாயிகளை கவலை அடைய செய்து உள்ளது.

எனவே தமிழக அரசு கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட்டு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட கட்டாயப்படுத்த வேண்டும். காவிரி நதிநீர் ஆணையம் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொண்டு உத்தரவை நிறைவேற்ற வேண்டும். வேளாண்மை பணிகளுக்கான டிராக்டர்கள், நடவு எந்திரங்கள் இருப்பு மற்றும் தேவைகள் குறித்து வேளாண்மை துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்