கோடியக்கரை கடற்கரையில் பிணமாக கிடந்தவர் இலங்கையை சேர்ந்த மீனவர்
கோடியக்கரை கடற்கரையில் பிணமாக கிடந்தவர் இலங்கையை சேர்ந்த மீனவர் என போலீசார் விசாரணையில் அடையாளம் தெரிந்தது.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 7-ந்தேதி 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் மீன் பிடிக்கும்போது படகில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கடலில் குளிக்கும் போது மூழ்கி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பிணமாக கிடந்தவரின் ஆடையில் இலங்கை நாட்டின் தேசிய கொடி வரையப்பட்டு இருந்ததால் அவர் இலங்கையை சேர்ந்தவரா? என விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தது இலங்கையை சேர்ந்த மீனவரான சில்வேஸ்ரர் மரியதாஸ் (வயது41) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 1-ந்தேதி இலங்கை நெடுந்தீவில் இருந்து கட்டுமரத்தில் தனியாக மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது கட்டுமரத்தில் இருந்து அவர் தவறி கடலில் விழுந்து கோடிக்கரை கடற்கரையில் பிணமாக கரை ஒதுங்கி உள்ளார்.
இதுகுறித்து உறுதி செய்வதற்கு இலங்கை தூதரகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை குழும போலீசார் தெரிவித்தனர்.