சார்ஜ் ஏற்றும்போது செல்போன் வெடித்து தீ விபத்து; மின்சாதன பொருட்கள் எரிந்து சேதம்
செல்போன் சார்ஜ் ஏற்றும்போது வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்களான குளிர்சாதனபெட்டி, துணி துவைக்கும் எந்திரம் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தது.;
அதிக அளவில் புகை
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வடக்கு ரெட்டி தெருவில் வசிப்பவர் சதாசிவம் (வயது 55). இவரது மகன் விஜயகுமார் (25). இவர் தனது செல்போனை வீட்டில் உள்ள சோபாவின் மீது வைத்து சார்ஜ் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் இருந்து அதிக அளவில் புகை வந்ததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்சாரதுறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மின்சார துறையினர் அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர்.
மின்சாதன பொருட்கள் சேதம்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த சோபா, கட்டில் மேல் இருந்த மெத்தை, குளிர்சாதனபெட்டி, துணி துவைக்கும் எந்திரம், டி.வி. போன்ற பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. தீயணைப்பு துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சார்ஜ் ஏற்றும்போது செல்போன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.