சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால் ஊட்டிக்கு வரும் பயணிகள் ஏமாற்றம்

சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால், ஊட்டிக்கு வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

Update: 2021-07-09 22:47 GMT
ஊட்டி

சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால், ஊட்டிக்கு வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

இ-பாஸ் நடைமுறை ரத்து

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. கடந்த 5-ந் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. 

இருப்பினும் கொரோனா பரவலை தடுக்க சுற்றுலா தலங்கள் திறக்கப்படவில்லை. இ-பாஸ் ரத்து செய்யப்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வருகின்றனர். மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து சென்று தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

தொட்டப்பட்டா மலைச்சிகரம்

இந்த நிலையில் நேற்று ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு செல்லும் சந்திப்பு பகுதியில் சுற்றுலா பயணிகள் வரிசையாக கார்களில் வந்து இறங்கினர். அங்கு சோதனை சாவடி மூடப்பட்டு இருந்ததால், மலைச்சிகரத்தை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 

அவர்கள் சாலையில் நின்றவாறு வனப்பகுதியின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது சுற்றுலா பயணிகளை பார்த்த போலீசார் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. எனவே சாலை வழியாக செல்லும்போது இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்று கூறி அனுப்பி வைத்தனர். 

ஏமாற்றம்

அவர்கள் கோத்தகிரி சாலையில் செல்லும்போது பசுமையான தேயிலை தோட்டங்களை பார்வையிட்டனர். ஊட்டி படகு இல்ல சாலையில் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியவில்லை என்றாலும், ஊரடங்குக்கு பின்னர் பொழுது போக்குவதற்காக ஊட்டியில் பலர் குவிந்து உள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஊட்டியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு இருக்கும் என்று வந்தோம். திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்புகிறோம். இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தபடியும், இயற்கை காட்சிகளை ரசித்தபடியும் செல்கிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்