கட்டாய திருமணத்தால் கல்லூரி மாணவி தற்கொலை: கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய பெற்றோர், தாய்மாமன் உள்பட 6 பேர் மீது வழக்கு-உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்ததால் பரபரப்பு
கட்டாய திருமணத்தால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை எரித்து, கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய பெற்றோர், தாய்மாமன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வாழப்பாடி:
கட்டாய திருமணத்தால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை எரித்து, கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய பெற்றோர், தாய்மாமன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கல்லூரி மாணவிக்கு கட்டாய திருமணம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 53). விவசாயி. இவருடைய மனைவி தேன்நிலா (43). இந்த தம்பதியின் மகள் ராகவி (20). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இறுதியாண்டு படித்து வந்தார். அப்போது தன்னுடன் படித்த சக மாணவர் ஒருவருடன் ராகவிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையறிந்த ராகவியின் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் ராகவி வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே திடீரென ராகவியை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாய்மாமனான வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் (38) என்பவருக்கு 2-ம் தாரமாக திருமணம் செய்து வைத்தனர். தியாகராஜனின் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனது 2 குழந்தைகளுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று விட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
தாய்மாமனுடன் திருமணம் செய்து வைத்ததால் ராகவி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து ராகவியின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் சகோதரர்கள் ராமலிங்கம் (25), ராகுல் (23), உறவினரான மன்னாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மாது (50) ஆகியோர் சேர்ந்து அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் எரிக்க முடிவு செய்தனர். அதன்படி அவசர அவசரமாக அவரது உடலை அருகிலுள்ள பள்ளத்தாதனூர் மயானத்திற்கு கொண்டு சென்று எரித்தனர்.
6 பேர் மீது வழக்கு
மேலும், ராகவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாக உறவினர்கள், ஊர்க்காரர்களிடம் அவர்கள் கூறி நாடகமாடினர். சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பிறகு கல்லூரி மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து சின்னமநாயக்கன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுஜாதா நேற்று முன்தினம் வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராகவியின் பெற்றோர் அர்ஜூனன், தேன்நிலா, தாய்மாமன் தியாகராஜன், சகோதரர்கள் ராமலிங்கம், ராகுல், உறவினர் மாது ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உதவி கலெக்டர் விசாரணை
திருமணமாகி ஒரே மாதத்தில் ராகவி தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்தினி விசாரணை நடத்தி வருகிறார்.
தாய்மாமனுக்கு 2-ம் தாரமாக கட்டாய திருமணம் செய்து வைத்ததால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்து, கொரோனா தொற்றால் அவர் உயிரிழந்ததாக பெற்றோரே நாடகமாடிய சம்பவம் வாழப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.