மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி
பெட்ரோல்-டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று ஈரோட்டில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
ஈரோடு
பெட்ரோல்-டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று ஈரோட்டில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
நிபுணர் குழு
ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைப்பதுடன், நிபுணர் குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோட்டில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். அத்திக்கடவு, அவினாசி திட்ட பணிகளையும் விரைவுபடுத்தவேண்டும். காவிரி உள்ளிட்ட நீர் உரிமை சார்ந்த விஷயங்களுக்கு மத்திய அரசுடன் பேசி விவசாய நலன் சார்ந்த உரிமை காக்க வேண்டும்.
மேகதாது அணை
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டுவது ஏற்புடையது அல்ல.
தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கூறியதில் மத்திய அரசு உறுதியுடன் இருக்க வேண்டும். டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. குறிப்பாக பாரா ஒலிம்பிக்கில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்லும் உயரிய நிலையை அடைந்துள்ளார். அவருக்கு த.மா.கா. சார்பில் வாழ்த்துகள்.
நீட் தேர்வு
கல்வியை ஒருபோதும் அரசியல் ஆக்கக்கூடாது. நீட் தேர்வு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதுவரை மாணவர்களை அரசியல் கட்சிகள் குழப்ப வேண்டாம். ஒன்றிய அரசு, மத்திய அரசு என்ற வார்த்தை சொல் விளையாட்டால் மத்திய, மாநில அரசின் அதிகாரத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடர்கிறது.
தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயுவுக்கு ரூ.100 மானியம் ஆகிய முக்கிய வாக்குறுதிகளை சாக்குப்போக்கு கூறாமல் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு கொரோனா 3-ம் அலையை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணைத்தலைவர் ஆறுமுகம், இளைஞர் அணி தலைவர் யுவராஜா, மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், நிர்வாகி கவுதமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.