தபால் பெண் ஊழியர் கழுத்தை அறுத்து தற்கொலை
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் தபால் நிலைய பெண் ஊழியர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
சிக்கமகளூரு: திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் தபால் நிலைய பெண் ஊழியர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தபால் நிலைய பெண் ஊழியர்
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா ரேக்லகெரே கிராமத்தை சேர்ந்தவர் மானசா (வயது 22). இவர் செல்லகெரே அருகே ஈச்சலகெேர கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மானசாவுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
கடந்த மாதம் தான் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மேலும் அவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.
தற்கொலை
இந்த நிலையில் மானசா, மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் மனநோய் குணமாகவில்லை. இதனால் மானசா, மனமுடைந்து காணப்பட்டு வந்தார். மேலும் மனநோயால் பாதிக்கப்பட்ட காரணத்திற்காக ஏற்கனவே 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மானசாவை அவருடைய குடும்பத்தினர் காப்பாற்றியிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரேக்லகெரேயில் இருந்து ஈச்சலகெரேவுக்கு மானசா ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ரேக்லகெரே-ஈச்சலகெரே இடைப்பட்ட பகுதியில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றார். அங்கு வைத்து மானசா, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக்கொண்டார். மேலும் தான் வைத்திருந்த திராவகத்தையும் (ஆசிட்) எடுத்து குடித்துள்ளாா். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சோகம்
இந்த நிலையில் மானசா, வனப்பகுதியில் பிணமாக கிடப்பதை பார்த்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள், செல்லகெரே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மானசாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனநோயால் பாதிக்கப்பட்டதால் மானசா, கழுத்தை அறுத்தும், திராவகத்தை குடித்தும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து செல்லகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில், மானசா தற்கொலை செய்துகொண்டது அவருடைய குடும்பத்தையும், அந்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.