தைரியம் இருந்தால் சுமலதாவின் வீடியோவை வெளியிடுங்கள்; குமாரசாமிக்கு, ராக்லைன் வெங்கடேஷ் சவால்
சுமலதாவின் வீடியோவை தைரியம் இருந்தால் வெளியே விடும்படி குமாரசாமிக்கு, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சவால் விடுத்து உள்ளார்.
பெங்களூரு: சுமலதாவின் வீடியோவை தைரியம் இருந்தால் வெளியே விடும்படி குமாரசாமிக்கு, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சவால் விடுத்து உள்ளார்.
தைரியம் இருந்தால்....
கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
சுமலதா எம்.பி. தொடர்பான வீடியோ தன்னிடம் உள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார். அவருக்கு தைரியம் இருந்தால் அந்த வீடியோவை வெளியிட வேண்டும். மண்டியா நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். அப்போது மண்டியாவில் உள்ள ஒரு ஓட்டலில் ஆலோசனை நடத்த நானும், சுமலதாவும் சென்றோம்.
நாங்கள் ஓட்டலுக்குள் சென்ற வீடியோ காட்சிகளை மார்பிங் செய்து தரும்படி குமாரசாமி, ஒரு தொலைக்காட்சி நிருபரிடம் கேட்டு உள்ளார். இதை அவர் தான் என்னிடம் கூறினார். தேவைப்படும் போது வீடியோவை வாங்கி கொள்வதாக குமாரசாமி கூறியுள்ளார். முதல்-மந்திரியாக பணியாற்றியவர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டது சரியல்ல. ராஜ்குமார், விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் அமைக்க இடம் வாங்கி கொடுத்தவர் அம்பரீஷ்.
தனி ஆள் இல்லை
அம்பரீசுக்கு, குமாரசாமி எதுவும் செய்யவில்லை. அம்பரீசால், குமாரசாமி தான் பயன் அடைந்தார். இதை அவர் மறக்க வேண்டாம். மண்டியா தேர்தலில் நிகில் தோற்றதால் சுமலதா மீது குமாரசாமி கோபத்தில் உள்ளார். கே.ஆர்.எஸ். அணை பற்றி சுமலதா கூறினார். ஆனால் அம்பரீசை பற்றி தேவையில்லாத கருத்துகளை குமாரசாமியும், அவரது கட்சியினரும் பேசி வருகின்றனர். அம்பரீசை பற்றி பேசுவதை குமாரசாமி நிறுத்தி கொள்ள வேண்டும்.
தான் செல்லும் இடங்களில் அம்பரீஷ் எனது நண்பர் என்று கூறி வரும் குமாரசாமி, அம்பரீசுக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கவில்லை. குமாரசாமியை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் இறந்த நடிகர் சஞ்சாரி விஜயின் இறுதிச்சடங்கு கூட அரசு மரியாதையுடன் தான் நடந்தது. யாரும் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த கேட்கவில்லை. சுமலதா தனி ஆள் இல்லை. அவர் பின்னால் என்னை போன்று ஏராளமான அம்பரீசின் ரசிகர்கள், தொண்டர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.