டாக்டர் காரின் டயரில் காற்றை பிடுங்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
அருமனையில் டாக்டர் காரின் டயரில் காற்றை திறந்து விட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அருமனை,
அருமனையில் டாக்டர் காரின் டயரில் காற்றை திறந்து விட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
காரின் டயர் சேதம்
குமரி மாவட்டம் அருமனை நெடியசாலை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் ஜெயின். இவர் பனச்சமூடு பகுதியில் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். அத்துடன் தினமும் மாலையில் அருமனை சந்திப்பில் ஒரு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செல்வது வழக்கம்.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டாபர் மாதம் வழக்கம்போல் அருமனை சந்திப்பில் உள்ள ஆஸ்பத்திரிக்கு காரில் சென்றார். அங்கு காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அருமனை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரப குமார், ேபாக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தி இருப்பதாக கூறி டாக்டர் காரின் டயரில் காற்றை திறந்துவிட்டு சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனை அறிந்த டாக்டர் ஜெயின், தான் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி காரை நிறுத்தியிருந்ததாக உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தார். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது.
அபராதம்
இதனால், கடந்த 2017-ம் ஆண்டு குழித்துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது வழக்கை விசாரித்த குழித்துறை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி தர்மபிரபு தீர்ப்பு அளித்தார்.
அந்த தீர்ப்பில் டாக்டரின் காரை சேதப்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் பிரபா குமாருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நீதிமன்ற செலவாக ரூ.8 ஆயிரத்து 439-ஐ பாதிக்கப்பட்ட டாக்டருக்கு வழங்க வேண்டுமென்றும், இந்த தொகையை ஒரு மாதத்திற்குள் டாக்டருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.