திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த உறவினர்கள்
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆனி அமாவாசையையொட்டி, மறைந்த முன்னோர்களுக்கு உறவினர்கள் தர்ப்பணம் செய்தனர்.
ஸ்ரீரங்கம்,
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆனி அமாவாசையையொட்டி, மறைந்த முன்னோர்களுக்கு உறவினர்கள் தர்ப்பணம் செய்தனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையிலும் ஒவ்வொரு அமாவாசையன்றும் மறைந்த முன்னோர்களுக்கு உறவினர்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அங்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஊரடங்கில் பெரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், திருச்சி அம்மா மண்டபத்திலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் தவித்து வந்த உறவினர்கள், நேற்று ஆனி அமாவாசையையொட்டி ஏராளமானோர் அம்மா மண்டபம் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அலைமோதிய கூட்டம்
அம்மா மண்டபத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால், அம்மா மண்டபம் படித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்த பகுதியில் திருச்சி மாநகராட்சி சார்பில் இலவச ஆர்.டி.-பி.சி.ஆர். என்னும் கொரோனா பரிசோதனை முகாமும் நடைபெற்றது.
படித்துறைக்கு வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். அங்குபாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து வரும்படியும் அறிவுறுத்தினர்.