டாஸ்மாக் பார் ஊழியர் கழுத்தை நெரித்துக்கொலை
நாங்குநேரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் டாஸ்மாக் பார் ஊழியர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய அவரது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
நாங்குநேரி:
நாங்குநேரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் டாஸ்மாக் பார் ஊழியர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய அவரது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
டாஸ்மாக் பார் ஊழியர்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 38). இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுமித்ரா (31). இவர்களுக்கு தனுஸ்ரீ (5), இசைவி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
முத்துகுமாருடன் தாயார் ராமு (75), மைத்துனர் ராஜேஷ் (32) ஆகியோரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.
கடந்த 7-ந் தேதி காலையில் வழக்கம்போல் முத்துகுமார் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பினார். பின்னர் மறுநாள் அதிகாலையில் முத்துகுமார் தனது வீட்டின் வாசலில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முத்துகுமார் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
தவறி விழுந்து இறந்தார்
முத்துகுமாரின் முகத்தில் காயம் இருந்தது. எனவே, அவர் வீட்டு வாசலில் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்து இறந்திருக்கலாம் என்று மனைவி சுமித்ரா கூறினார். மேலும் கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்குமாறும் கூறினார்.
இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, முத்துகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் முத்துகுமாரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மனைவி-கள்ளக்காதலன் கைது
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், முத்துகுமாரின் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சுமித்ராவிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டபோது, அவர் கணவர் முத்துகுமாரை கள்ளக்காதலனான அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் சுந்தருடன் (38) சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து சுமித்ரா, சுந்தர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான சுமித்ரா போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-
திட்டம் தீட்டினோம்
எனது திருமணத்துக்கு முன்னரே சுந்தரை காதலித்து வந்தேன். பின்னர் பெற்றோரின் வற்புறுத்தலினால், உறவினரான முத்துகுமாரை திருமணம் செய்தேன். சுந்தருக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
எனினும் சுந்தருடனான கள்ளக்காதலை தொடர்ந்து வந்தேன்.
இதனை அறிந்த முத்துகுமார் எங்களைக் கண்டித்தார். மேலும் சுந்தரை தீர்த்துக்கட்டி விடுவதாகவும் மிரட்டினார். எனவே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினோம்.
கழுத்தை நெரித்துக்கொலை
அதன்படி சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டுக்கு வந்த முத்துகுமார் மதுபோதையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது சுந்தரை வீட்டுக்கு வரவழைத்தேன். பின்னர் நானும், சுந்தரும் சேர்ந்து முத்துகுமாரின் முகத்தில் தலையணையால் அமுக்கியும், கழுத்தில் போர்வையால் நெரித்தும் கொலை செய்தோம்.
பின்னர் முத்துகுமாரின் உடலை வீட்டின் வாசலில் தூக்கிப்போட்டு விட்டு, அவர் தடுமாறி விழுந்து இறந்ததாக நாடகமாடினோம். ஆனாலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து முத்துகுமாரின் சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்தனர். கைதான சுமித்ரா, சுந்தர் ஆகிய 2 பேரையும் போலீசார் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான சுந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளராக உள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.