3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை மாவட்டத்தில் 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update: 2021-07-09 18:26 GMT
நெல்லை:

நெல்லை அருகே உள்ள தாழையூத்து காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் காளிமுத்து என்ற கார்த்திக் (வயது 23). கஞ்சா விற்ற இவரை தாழையூத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், தாழையூத்து இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, காளிமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் காளிமுத்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை தாழையூத்து போலீசார் நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினார்கள்.

மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற ஆண்டி மணிகண்டன் (21). இவர் மீது மானூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. இந்த நிலையில் கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் போலீசார் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் ராதாபுரம் அருகே உள்ள வைராவிகுளத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் மகன் சரண்ராஜ் (27). இவர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் சரண்ராஜ் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை போலீசார் சிறை அதிகாரியிடம் வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்