மேற்கு புறவழிச்சாலை அமைக்க 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
கோவை மேற்குபுறவழிச்சாலை அமைக்க 120 பேருக்கு ரூ.35 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டு 30 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோவை
கோவை மேற்குபுறவழிச்சாலை அமைக்க 120 பேருக்கு ரூ.35 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டு 30 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேற்கு புறவழிச்சாலை
கோவை மாநகரில் பெருகி வரும் வாகன நெரிசலை கட்டுப் படுத்தும் வகையில் கோவை-பாலக்காடு சாலையில் உள்ள மைல் கல் பகுதியில் தொடங்கி நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ. தூரத்திற்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக 355 ஏக்கர் நிலங்கள் 16 கிராமங்களில் இருந்து கையகப் படுத்தப்பட உள்ளது.
இதில் முதல்கட்டமாக 11 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக 5 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து 120 பேரிடம் இருந்து 30 ஏக்கர் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
30 ஏக்கர் நிலம்
கோவை மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.
இந்த சாலை 3 கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. இதில் முதற்கட்டமாக கோவை-பாலக்காடு சாலையில் மைல்கல் பகுதியில் தொடங்கி பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து இதுவரை 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக 120 பேருக்கு ரூ.35 கோடி இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டு உள்ளது.
நெரிசல் குறையும்
இதுதவிர மேலும் 40 பேருக்கு ரூ.5 கோடி இழப்பீடு தொகை இன்னும் சில நாட்களில் வழங்கப்படும். இதனை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் சில வாரங்களில் தொடங்கப்படும்.
இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன் பாளையம், சோமையம்பாளையம், பன்னிமடை வரை 2-ம் கட்டமாகவும், நஞ்சுண்டாபுரம், குரும்பபாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 3-ம் கட்டமாகவும் சாலை அமைக்கப்படுகிறது.
இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும்போது கோவையில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.