அரசியல் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை

முத்துப்பேட்டை அருகே அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-07-09 17:53 GMT
முத்துப்பேட்டை;
முத்துப்பேட்டை அருகே அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 
மோட்டார் சைக்கிளில் சென்றார்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள ஆரியலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கரிகாலன். இவருடைய மகன் ரஜினி பாண்டியன்(வயது45). இவர் நீண்ட நாட்களாக ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தார். இந்தநிலையில் சில வருடங்களுக்கு முன்பு அந்த கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்கிய பாலை பட்டாபிராமனின் வளரும் தமிழகம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக தற்போது இருந்தார். நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் ரஜினிபாண்டியன்   தனது மோட்டார் சைக்கிளில் எடையூர் மூலமதகு பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். 
வெட்டிக்கொலை
அப்போது அங்கு பதுங்கி இருந்த சில மர்ம நபர்கள்  ரஜினிபாண்டியனின் மோட்டார் சைக்கிளை மறித்து அவரை சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி சாய்த்து விட்டு அங்கு இருந்த தப்பி சென்று விட்டனர். 
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் திரண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஜினிபாண்டியன் பரிதாபமாக இறந்தார்.  
விசாரணை 
இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து  விசாரணை மேற்கொண்டனர். 
மேலும். முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் கொலையாளிகள் குறித்து  விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையாளிகள் குறித்து முதற்கட்ட தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்