கடலூர் துறைமுகத்தில் படகுகளில் கருப்புக்கொடி கட்டி மீனவர்கள் போராட்டம் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கடலூர் துறைமுகத்தில் படகுகளில் கருப்புக்கொடி கட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-09 17:41 GMT
கடலூர்முதுநகர், 

கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, நல்லவாடு, எம்.ஜி.ஆர். திட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 300-க்கும் அதிகமான மீனவர்கள் நேற்று பைபர் படகுகளில் கருப்புக் கொடி கட்டிக் கொண்டு, உப்பனாற்றில் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மீனவ பெண்கள் அங்கு கரை பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

இழுவலைக்கு தடை வேண்டும்

அப்போது, கையில் கருப்புக் கொடிகளுடன் இழு வலை மற்றும் எஸ்.டி.பி., ஐ.பி. வகை படகுகளை தடை செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.  எஸ்.டி.பி., ஐ.பி., வகை மீன்பிடி படகுகள் துறைமுகத்திலிருந்து 5 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் மீன் பிடிக்கக் கூடாது என்றும், 

சிறிய கண் (40 மில்லி மீட்டருக்கு கீழ்) அளவுள்ள வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது, 240 குதிரைத்திறனுக்கு அதிக திறன்கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிக்க செல்லக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இந்நிலையில், அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

தொடர்ந்து போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, குறிப்பிட்ட ஒரு சில மீனவ கிராம நிர்வாகிகள் மட்டும் மீன்வளத் துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டது. 

இதையடுத்து மீனவ கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன் மற்றும் உதவி இயக்குனர் வேல்முருகன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

வாக்குவாதம்

அப்போது மீனவ கிராம நிர்வாகிகள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இழு வலை, எஸ்.டி.பி., ஐ.பி., படகுகளை முறையாக ஆய்வு செய்து, கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுபடி நடவடிக்கை எடுக்க வேண்டும், சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதற்கு மீனவ கிராம நிர்வாகிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட  போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.


பின்னர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்