கடைமடைக்கு வந்து சேர்ந்தது காவிரி நீர்: கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்ததை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்,
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக காவிரி ஆற்றில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டார். இந்த தண்ணீர் கல்லணையை கடந்த மாதம் 16-ந்தேதி வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கடலூர், தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீழணையை கடந்த மாதம் 24-ந்தேதி வந்தடைந்தது.
9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையில் 7 அடியை எட்டிய பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தொடக்கத்தில் கீழணைக்கு வினாடிக்கு 250 கனஅடி நீர் தான் வந்து கொண்டிருந்தது.
இதனால் அதன் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வந்தது. இந்த நிலையில் கல்லணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 750 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியது.
தண்ணீர் திறப்பு
அதன்படி நேற்று கீழணையில் நீர்மட்டம் 8 அடியை எட்டியது. இதையடுத்து காலை 10 மணிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரை திறந்து விட்டனர்.
இந்த தண்ணீர் வீராணம் ஏரிக்கு இன்று (சனிக்கிழமை) காலை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். தற்போது ஏரி தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.
காவிரி டெல்டாவில் கடைமடை பகுதியாக இருக்கும் வீராணம் ஏரியை காவிரி நீர் வந்தடைய உள்ளதால், அதை சார்ந்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளை ஏற்கனவே தொடங்கி இருந்த விவசாயிகள், இனி தீவிரப்படுத்த இருப்பதாக தெரிவித்தனர். மேலும் சென்னை மக்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்வதிலும் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.