மணிலா மூட்டைகளுக்குள் மறைத்து லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
மணிலா மூட்டைகளுக்குள் மறைத்து லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.
அணைக்கட்டு
லாரியை சுற்றி வளைத்தனர்
ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு லாரியில் போதைப் பொருள் கடத்தி செல்வதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட லாரி செல்வதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காலை 10 மணிக்கு சாதாரண உடை அணிந்து போலீசார் லாரியை பிடிக்க காத்திருந்தனர். சுமார் 11.30 மணிக்கு சுங்கச்சாவடிக்கு வந்த அந்த லாரியை போலீசார் சுற்றி வளைத்து நிறுத்தினர்.
போதைப்பொருள் கடத்தல்
லாரியை சோதனை செய்ததில் அதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மணிலா விதை மூட்டைக்குள் 181 பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அதை பிரித்து பார்த்தபோது அதில் போதைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போதைப்பொருள் அடங்கிய பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து லாரியில் இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் ஆண்டிப்பட்டி கொண்ட நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 48), ஆண்டிப்பட்டியை சேர்ந்த பாண்டி (50) என்பது தெரியவந்தது.
இவர்கள் ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு மணிலா விதை மூட்டையின் நடுவில் சுமார் 362 கிலோ கொண்ட போதை பொருளை கடத்தி செல்வதாக ஒப்புக்கொண்டனர்.
2 பேர் கைது
இதனையடுத்து அவர்களை பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முருகன் மற்றும் பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.