புவனகிரியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

புவனகிரியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-09 17:31 GMT
புவனகிரி, 

புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில் உள்ளது ஆதிவராக நத்தம் பகுதி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த பகுதி மக்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது பற்றி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

சாலை மறியல்

இதனால்த ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை காலி குடங்களுடன் ஆதிவராகநத்தம் பகுதியில் சேத்தியாத்தோப்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எங்களுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். 

2 நாட்களில் நடவடிக்கை

தொடர்ந்து புவனகிரி தாசில்தார் அன்பழகன் நேரில் வந்து பொதுமக்களிடம் குடிநீர் கிடைக்க 2 நாட்களுக்குள் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்