கடலூர், பண்ருட்டி பகுதியில் பலத்த மழை நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

கடலூர், பண்ருட்டி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதில் நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.;

Update: 2021-07-09 17:30 GMT
கடலூர், 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 8-ந் தேதி (அதாவது நேற்று முன்தினம்) முதல் 11-ந் தேதி (நாளை, ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அறிவித்திருந்தது.

நள்ளிரவில் மழை

இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதியடைந்தனர். மேலும் இரவில் கடும் புழுக்கத்தால் பலர் தூக்கத்தை தொலைத்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 12,30 மணி அளவில் கடலூரில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.

நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது. திடீரென பெய்த இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.

இதேபோல் பண்ருட்டி, வானமாதேவி, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமயிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல் மூட்டைகள் சேதம்

இந்த நிலையில் நள்ளிரவு பெய்த மழையால் கடலூர் தோட்டப்பட்டு, பண்ருட்டி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத சோகத்தில் கண் கலங்கியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடலூர் தோட்டப்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து சுமார் ஒரு மாதமே ஆகிறது. அதற்குள் 2-வது முறையாக நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன. 

அதனால் சேதமான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க, வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்