ஊழியர்கள் சாலை மறியல்

கம்பத்தில் ஓட்டலுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்ததை கண்டித்து ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-09 17:16 GMT
தேனி : 

தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து ஒழுங்கு முறை விற்பனை கூடம் வரை உள்ள கடைகளில் நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் நேற்று ஆய்வு செய்தார். 

அப்போது ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே முருகன் என்பவருடைய ஓட்டலில் டீ மாஸ்டர் முக கவசம் அணியாமல் இருந்தார். இதையடுத்து கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத ஓட்டலை பூட்டி ‘சீல்’ வைக்கும்படி ஊழியர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். 

இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் ஓட்டலை பூட்டி ‘சீல்’ வைத்தனர். கொரோனா ஊரடங்கால் நீண்ட நாட்கள் வியாபாரம் இல்லாமல் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வால் வியாபாரம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஓட்டலை பூட்டி சீல் வைத்ததை கண்டித்து ஊழியர்கள், ஓட்டல் உரிமையாளர் முருகன் மற்றும் அவருடைய உறவினர்கள் தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  

தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பின்னர் கடையின் சாவியை நகராட்சி அதிகாரிகளிடம் இருந்து வாங்கி கடை உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்