கடந்த 10 ஆண்டுகளாக ஒகேனக்கல் குடிநீர் திட்டம் சரியாக நிர்வகிக்கப்படவில்லை அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்று தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டினார்.;

Update: 2021-07-09 16:33 GMT
தர்மபுரி
ஒகேனக்கல் குடிநீர் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக சரியாக நிர்வகிக்கப் படவில்லை என்று தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டினார்.
ஒகேனக்கல் குடிநீர்
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தர்மபுரி மாவட்டத்தில் அதகபாடி, பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் திவ்யதர்சினி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செங்குட்டுவன், கண்காணிப்பு பொறியாளர் மணிகண்டன், திட்ட அலுவலர் மற்றும் செயற்பொறியாளர் சங்கரன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் அமைச்சரிடம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புளோரைடு பாதிப்பை தடுக்க ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது பொதுமக்களுக்கு ஒகேனக்கல் குடிநீருடன் புளோரைடு கலந்த குடிநீரும் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மீண்டும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த  திட்டம் தொடங்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
முதல்-அமைச்சர் உத்தரவு
இதைத்தொடர்ந்து தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு கலெக்டர்கள் திவ்யதர்சினி (தர்மபுரி), ஜெயசந்திரபானு ரெட்டி (கிருஷ்ணகிரி) உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஒகேனக்கல் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
புளோரைடு பாதிப்பில்லாத சுகாதாரமான குடிநீரை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 2008- ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கிவைத்த ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஜப்பான் நாட்டுக்கு சென்று நிதி உதவி பெற்று ரூ.1,928 கோடி மதிப்பில் சிறப்பு திட்டமாக கடந்த 2010-ம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். அதற்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டம் சரியாக நிர்வகிக்கப்படவில்லை. தற்போது முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் அவருக்கு சென்றன. இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி குறைகளை கண்டறிந்து தீர்வு காண அவர் உத்தரவிட்டதன் பேரில் இங்கு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
புளோரைடு பாதிப்பு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒகேனக்கல் குடிநீர் வினியோகிக்கப்படும் 7,639 குடியிருப்பு பகுதிகளில் மொத்தம் 999 குடியிருப்பு பகுதிகளில் புளோரைடு பாதிப்பு இருப்பதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டது. இதுதொடர்பாக தற்போது நடத்தப்பட்ட நேரடி ஆய்வில் தர்மபுரி மாவட்டத்தில் 53 குடியிருப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 குடியிருப்புகள் என மொத்தம் 153 குடியிருப்புகளில் 1.5 மில்லி கிராம் அளவில் புளோரைடு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
இதேபோல் ஒகேனக்கல் குடிநீர் குழாய்களில் உடைப்பு, நிலத்தடி நீரை ஒகேனக்கல் குடிநீருடன் சேர்த்து வழங்குதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு ஓரிரு வாரங்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். ஒகேனக்கல் குடிநீருக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் தேவைப்படும் இடங்கள் கண்டறிந்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அரசாணை பெற்று பணிகள் நிறைவேற்றப்படும்.
பஞ்சப்பள்ளி குடிநீர்
ஒகேனக்கல் குடிநீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற தேவைகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பாலக்கோடு பகுதியின் தேவைக்காக பஞ்சப்பள்ளி குடிநீர் எடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இதனால் தர்மபுரி நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக உரிய ஆய்வு நடத்தி தீர்வு காணப்படும். பஞ்சப்பள்ளியில் இருந்து தர்மபுரி நகராட்சிக்கு கிடைத்து வந்த குடிநீரின் அளவை ஒகேனக்கல் குடிநீர் திட்டம் மூலம் கூடுதலாக தர்மபுரி நகராட்சி பகுதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மேலும் செய்திகள்