உணவகங்களில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோ டீசலாக மாற்றும் திட்டம் தொடக்கம் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் உணவகங்களில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோ டீசலாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தெரிவித்தார்.

Update: 2021-07-09 16:28 GMT
தர்மபுரி:

விழிப்புணர்வு
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவகங்களில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோ டீசலாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உணவகம், பேக்கரிகள் மற்றும் கார, இனிப்பக தயாரிப்பாளர்களுக்கு திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனை கூட்டம் தர்மபுரி ஹோட்டல் ஸ்ரீ ராமா கூட்டரங்கில் நடைபெற்றது. 
இந்த கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட உணவகம் மற்றும் பேக்கரி உரிமையாளர் சங்க செயலாளர் வேணுகோபால் தலைமை தாங்கினார். தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்று பேசினார். இதில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவக, பேக்கரி மற்றும் இனிப்பு உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஓரிரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை பலமுறை சூடு்படுத்தி உபயோகப்படுத்துவதால் எண்ணெயின் பண்புகள் மாற்றப்படுகின்றன. இதனால் பல்வேறு உடல்நல பாதிப்புகள், உபாதைகள் குறிப்பாக ரத்த கொதிப்பு, கல்லீரல், இருதய பாதிப்புகள் உள்ளிட்ட நோய்களை எற்பட வாய்ப்பு அளிக்கிறது.
பயோ டீசலாக மாற்றும் திட்டம்
இதனை தவிர்க்கும் பொருட்டு ஓரிரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபயன்பாட்டுக்கு குறிப்பாக சுற்றுச்சுழல் பாதிக்காத பயோ டீசலாக மாற்றும் திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை வாங்கிக்கொள்ள இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய துறையினால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒரு நாளைக்கு அதிகம் 25 முதல் 50 லிட்டர் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் உணவகங்கள், பேக்கரிகள், கார மற்றும் இனிப்பு தயாரிப்பாளர்களை மாவட்டம் முழுவதும் இனம் கண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன் தொடக்கமாக கூட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரிப்பதற்கான கேன்களை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா, உணவக, பேக்கரி மற்றும் இனிப்பக உரிமையாளர்களிடம் வழங்கினார்.

மேலும் செய்திகள்