கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் இருவரையும் அந்த பெண்ணின் கணவர் கையும், களவுமாக பிடிக்க முயன்றதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2021-07-09 16:23 GMT
மதுரை, ஜூலை.
மதுரையில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் இருவரையும் அந்த பெண்ணின் கணவர் கையும், களவுமாக பிடிக்க முயன்றதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்காதல்
மதுரை அண்ணாநகர் கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் சிவசக்தி (வயது 43), ஓட்டல் தொழிலாளி. இவருைடய மனைவி சுப்புலட்சுமி (32), இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுப்புலட்சுமி கணவருடன் கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பின்னர் வேலை தேடி திருப்பூருக்கு சென்று, அங்கு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
அங்கு வேலை பார்த்து வந்த மதுரை பாலமேட்டை சேர்ந்த செல்வகுமார் (27) என்பவருக்கும், சுப்புலட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அதன் பின்னர் கொரோனாவால் அங்குள்ள பனியன் கம்பெனிகள் மூடப்பட்டதால் சுப்புலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு மதுரை கரும்பாலைக்கு திரும்பி வந்து விட்டார். அதே நேரத்தில் செல்வகுமாரும் சொந்த ஊருக்கு திரும்பினார். மதுரை வந்த பின்னரும் அவர்களுக்கு இடையேயான ரகசிய ெதாடர்பு தொடர்ந்து வந்தது.
தனிமையில் இருந்தனர்
இதற்கிடையே மனைவி சுப்புலட்சுமி ஊர் திரும்பியதை அறிந்த சிவசக்தி அவரை தேடி சென்றார். மனைவியிடம் நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று அழைத்தார். ஆனால் கணவருடன் சேர்ந்து வாழ சுப்புலட்சுமி மறுத்து விட்டார். இதனால் மனவருத்தம் அடைந்த சிவசக்தி சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அதன் பின்னரும் அவர் மனைவியை தேடி அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் தனது மனைவி சுப்புலட்சுமியுடன், செல்வகுமார் தனிமையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதவை தட்டி மனைவியிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர், உங்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும், இனி மேல் வீட்டிற்கு வரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
கள்ளக்காதலன் தற்கொலை
அதை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடிக்க நினைத்து சிவசக்தி சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு கூடி விட்டனர். மேலும் மனைவியின் கள்ளக்காதல் பற்றி தெரிவித்து போலீசாரையும் சிவசக்தி அழைத்துள்ளார். ேமலும் கள்ளக்காதலன் செல்வகுமாரை வெளியே செல்லவும் விடவில்லை.
இதனால் செல்வகுமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் போலீசாரிடம் சிக்கினால் தனக்கு அவமானம் என்று நினைத்து வீட்டிற்குள் சென்று அறையை பூட்டிக் கொண்டு செல்வகுமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மதுரையில் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்